மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடித்து வரும் வேளையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்ய முயலும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பாகிஸ்தான் ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தூது செல்வதாகக் கூறிக்கொண்டாலும், மறுபுறம் அது “இரட்டை வேடம்” (Double Game) ஆடுவதாக ஈரான் கடும் அதிருப்தியில் உள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியில் பாகிஸ்தான் மேற்கொண்ட சில ரகசிய நகர்வுகள் மற்றும் அமெரிக்காவுடனான அதன் நெருக்கம் ஆகியவை ஈரானின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியிருந்த சூழலில், நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானின் கொடியிடப்பட்ட 10 எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி அளித்தது. ஆனால், இந்த விவகாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது ஈரானை ஆத்திரமடையச் செய்துள்ளது. ஈரான் தனது பிடியைத் தளர்த்தி அமெரிக்க ஆதரவு நாடுகளின் கப்பல்களுக்கு வழிவிட்டுவிட்டது போன்ற ஒரு பிம்பத்தை டிரம்ப் உருவாக்கியுள்ளார். இது பாகிஸ்தான் விரித்த வலை என்றும், அமெரிக்காவிற்கு உதவவே பாகிஸ்தான் இத்தகைய தந்திரத்தைக் கையாண்டதாகவும் ஈரான் கருதுகிறது.
பாகிஸ்தான் தன்னை ஒரு நடுநிலையான மத்தியஸ்தராகக் காட்டிக்கொள்ள முயன்றாலும், அது அமெரிக்காவின் 15 நிபந்தனைகளை ஈரானிடம் கொண்டு சேர்த்த விதம் ஒரு தூதுவரைப் போலன்றி, அமெரிக்காவின் பிரதிநிதியைப் போலவே இருந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஈரானின் பரம எதிரியான சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள நெருக்கமான ராணுவ உறவும் இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. ஒரு இஸ்லாமிய நாடாக இருந்து கொண்டு தங்களுக்குத் துரோகம் இழைப்பதாக ஈரான் கருதுவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தற்போது போர் நிறுத்தத்திற்கான முயற்சிகள் 4-வது வாரமாகத் தொடர்ந்து வரும் நிலையில், ஈரான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சிகளைப் பகிரங்கமாக நிராகரித்துள்ள ஈரான், ரெட் லைன் எனப்படும் அபாய எல்லையை பாகிஸ்தான் தாண்டிவிட்டதாக எச்சரித்துள்ளது. இரு தரப்பிலிருந்தும் ஆதாயங்களை அடையப் பார்க்கும் பாகிஸ்தானின் இந்த இரட்டை அணுகுமுறை, மத்திய கிழக்கின் அமைதிப் பேச்சுவார்த்தையில் மேலும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
