பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் 11-வது சீசன் தொடக்க ஆட்டத்திலேயே ஒரு வினோதமான சர்ச்சை வெடித்துள்ளது. லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் ஐதராபாத் கிங்ஸ்மேன் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, வெள்ளை நிற கூக்கபுரா பந்து திடீரென அடர் சிவப்பு நிறமாக மாறியது வீரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே ஐதராபாத் வீரர் மார்னஸ் லெபுசேன் இது குறித்து நடுவர்களிடம் முறையிட்டார். வீரர்களின் உடையில் இருந்து வெளியேறிய சாயமே பந்தின் நிறம் மாறக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஐதராபாத் கிங்ஸ்மேன் அணியின் புதிய மெரூன் நிறச் சீருடை மற்றும் பேட்களில் இருந்த தரம் குறைந்த சாயமானது, பந்து படும்போது அதில் ஒட்டிக்கொண்டதால் இந்தச் சங்கடம் நேர்ந்துள்ளது. ஆட்டத்தின் 15-வது ஓவர் முடிவில் பந்து முற்றிலும் நிறம் மாறி பேட்ஸ்மேன்களுக்குத் தெளிவாகத் தெரியாத நிலை ஏற்பட்டதால், நடுவர்கள் வேறு வழியின்றி புதிய பந்தை மாற்றினர். இந்தச் சம்பவத்தை நெட்டிசன்கள் “வரலாற்றின் முதல் பிங்க் பால் டி-20” என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். அடுத்த போட்டிக்குள் சீருடையின் தரத்தைச் சரிசெய்வதாக அந்த அணி நிர்வாகம் தற்போது உறுதியளித்துள்ளது.
