தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் வெளியாகியுள்ள ‘அக்னி நியூஸ்’ மற்றும் சர்வதேச கணிப்பு தளமான ‘பாலிமார்க்கெட்’ ஆகியவற்றின் தரவுகள், ஆளுங்கட்சியான திமுகவிற்கே மீண்டும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, திமுக கூட்டணி 180 இடங்கள் வரை கைப்பற்றக்கூடும் என்றும், சென்னையில் அனைத்துத் தொகுதிகளையும் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் எழுந்துள்ள கணிப்புகள், அறிவாலயத் தரப்பிற்குப் பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளன.
மறுபுறம், இந்தச் சர்வே முடிவுகள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியலில் ஒரு மாற்று சக்தியாக உருவெடுக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், அவருக்கு 7% முதல் 10% வரையிலான வாக்கு வங்கி மட்டுமே கிடைக்கும் என்கிற கணிப்புகள், அவரது ‘பிளாக்பஸ்டர்’ எதிர்பார்ப்புகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன. “வாக்குகளைப் பிரிப்பாரே தவிர, தொகுதிகளைப் பிடிக்க மாட்டார்” என்கிற விமர்சகர்களின் கருத்து, பனையூர் வட்டாரத்தில் கலக்கத்தை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக, விஜய் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கருதப்படும் சென்னை பெரம்பூர் தொகுதியில், அமைச்சர் சேகர் பாபுவின் தீவிரக் களப்பணிகளால் திமுகவின் கரம் ஓங்கியிருப்பது விஜய்க்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. சினிமாவில் ஹீரோவாக வலம் வந்தாலும், அரசியலில் ‘கிரவுண்ட் ஒர்க்’ எனப்படும் அடிமட்டக் களப்பணி இன்னும் முழுமையடையாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சேகர் பாபு போன்ற தேர்தல் ஜாம்பவான்களை எதிர்கொள்ள இன்னும் ஆழமான உத்திகள் தேவை என்பதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.
இந்தச் சூழலில், தனது ஐடி விங் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் விஜய் அவசர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளாராம். வெறும் திரை பிம்பத்தை மட்டும் நம்பாமல், மக்களின் நாடித்துடிப்பை அறிந்து களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் தவெக-விற்கு ஏற்பட்டுள்ளது. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை இந்த ‘டேட்டா’ யுத்தம் தொடரும் என்றாலும், ஸ்டாலினின் வியூகத்தை முறியடிக்க விஜய் எடுக்கப்போகும் அந்த ‘மாஸ்டர் பிளான்’ என்ன என்பதுதான் இப்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.
