“நீங்க சொன்னா நாங்க கேட்கணுமா?.. ஷாக் கொடுத்த ஈரான்”… அமெரிக்கா போட்ட பிளான் ஒரே அடியில் அவுட்… உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தும் அடுத்தகட்ட மூவ்….!

By Nanthini on பங்குனி 26, 2026

Spread the love

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களுக்கு இடையே, போரை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதற்கான 15 அம்சத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்தார். கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போரில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரான் சரணடையும் என அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால், ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் இஸ்ரேலையும் நிலைகுலையச் செய்துள்ளன. இந்தச் சூழலில் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஈரான் தற்போது அதிரடியாக நிராகரித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முன்மொழிவு “அதிகப்படியானது” மற்றும் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று ஈரானின் அரசுத் தொலைக்காட்சியான பிரஸ் டிவி தெரிவித்துள்ளது. அதிபர் டிரம்ப் தங்களுக்கு உத்தரவு போட முடியாது என்றும், போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை ஈரான் மட்டுமே தீர்மானிக்கும் என்றும் அந்த நாடு தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், தங்களின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

   

ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை. ஹார்முஸ் ஜலசந்தியில் தங்களுக்குள்ள முழுமையான உரிமையையும் இறையாண்மையையும் அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்பது ஈரானின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. மேலும், போரினால் ஏற்பட்ட கடுமையான சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்பதற்கு சர்வதேச அளவில் உறுதியான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

   

இவற்றுடன், ஈரானுக்கு எதிரான போர் மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் உள்ள பிற எதிர்ப்புப் போராட்டக் குழுக்களுக்கு எதிரான தாக்குதல்களையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. இந்த அனைத்து நிபந்தனைகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை தற்காப்புத் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்துள்ளதால், மத்திய கிழக்கில் பதற்றம் தணியாமல் போரின் உக்கிரம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.