இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் நீண்டகாலமாக எவராலும் உரிமை கோரப்படாமல் இருந்த சுமார் ரூ. 60,518 கோடி வைப்புத்தொகை தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 2026 ஜனவரி மாத நிலவரப்படி இந்தத் தொகை கணக்கிடப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தவிர, காப்பீட்டுத் துறையில் ரூ. 8,973 கோடியும், பரஸ்பர நிதி முதலீடுகளில் ரூ. 3,749 கோடியும் உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. இந்தத் தொகைகளுக்குச் சொந்தமான வாடிக்கையாளர்களை அல்லது அவர்களது வாரிசுகளை விரைந்து கண்டறிந்து பணத்தை ஒப்படைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வங்கிக் கணக்குகளை முறையாகப் பராமரிக்காதது அல்லது வாரிசுதாரர் விவரங்களைச் சரியாகப் பதிவு செய்யாததே இவ்வளவு பெரிய தொகை முடங்குவதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கி மற்றும் செபி (SEBI) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள் மூலம் தனித்துவமான தேடுதல் தளங்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளைச் சரிபார்த்து, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிமை கோரப்படாத நிதியை மீட்பதற்கான நடைமுறைகளை எளிதாக்கவும் வங்கி அமைப்புகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
