சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் தற்போது அதிமுக களத்திலேயே இல்லை என்றும், போட்டி என்பது திமுக மற்றும் தவெக இடையே மட்டுமே நிலவுவதாகவும் அதிரடியாகத் தெரிவித்தார். 26 கட்சிகள் கொண்ட திமுக கூட்டணி என்பது ஒரு ‘ஜீரோ கூட்டணி’ என்றும், அதில் பாதி லெட்டர் பேடு கட்சிகள் என்றும் அவர் விமர்சித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி வலுவான தலைவராக இல்லாததே திமுகவின் தொடர் வெற்றிக்குக் காரணம் என்றும், தற்போது அந்த இடத்தைப் பிடிக்க நடிகர் விஜய் தனது உச்சகட்ட சினிமா புகழைத் தியாகம் செய்துவிட்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்ட 11 தொகுதிகளில் தவெக தற்போதே முன்னிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, ஒட்டுமொத்தமாகச் சென்னையில் திமுகவை விட தவெக 2 சதவீதம் கூடுதல் வாக்கு வங்கியைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். எழும்பூர் போன்ற தொகுதிகள் இன்னும் பின்தங்கியே இருப்பதாகவும், மக்களை ஏழ்மையிலேயே வைத்திருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க திமுக நினைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நேர்மையான மற்றும் துணிச்சலான தலைவரைத் தேடும் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஒரே தலைவராக விஜய் உருவெடுத்துள்ளதாக அவர் முழங்கினார்.
திமுகவினர் தற்போது விஜய்யையும், தவெகவினரையும் கடுமையாக விமர்சிப்பது அவர்களின் பயத்தையே காட்டுகிறது என்று கூறிய அவர், 2011 தேர்தலில் ஜெயலலிதாவைத் திட்டத்த திட்டத்தான் அதிமுக பெரும் வெற்றி பெற்று திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழக்க நேரிட்டதைச் சுட்டிக்காட்டினார். வரும் தேர்தலில் திமுகவின் பாரம்பரிய அரசியலை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும், விஜய்யின் தியாகத்தை மக்கள் அங்கீகரிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதிமுகவின் வாக்கு வங்கி 17 சதவீதத்திற்குக் கீழ் குறைந்துவிட்டதால் அவர்கள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
