கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 31 வயதுடைய விமலா என்ற பெண், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட தொற்று மற்றும் தையல் பிரிந்து ரத்தம் வெளியேறியதால் உடல்நிலை மோசமடைந்தது. மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த நிலையில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை விமலாவின் உயிரைப் பறித்துள்ளது அவரது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.
மருத்துவர்களின் கவனக்குறைவே விமலாவின் மரணத்திற்கு காரணம் எனக்கூறி அவரது உறவினர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் ஆவேசமாக கோரிக்கை விடுத்தனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
