மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியளிக்கும் செய்தி கிடைத்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவிற்கு வர வேண்டிய இரண்டு முக்கியமான எரிவாயு கப்பல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் சுமார் 92,700 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வரும் ‘சிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ ஆகிய இந்த இரண்டு கப்பல்களும் குஜராத் துறைமுகங்களை விரைவில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த ராஜதந்திர முயற்சிக்கு ஈரானிடம் இருந்து கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவி வரும் போக்குவரத்துத் தடையால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவியது. பல இடங்களில் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல்கள் எழுந்த நிலையில், இந்த இரண்டு கப்பல்களின் வருகை அந்தப் பதற்றத்தைத் தணிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மீதமுள்ள இந்தியக் கப்பல்களையும் பாதுகாப்பாக மீட்பதற்கான பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு ஈரானுடன் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, விரைவில் சந்தையில் நிலவும் தட்டுப்பாடும் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
