அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள ராணுவ நடவடிக்கை தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய இந்த மோதலில் இரு தரப்பிலும் கடுமையான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஹார்மஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை (IRGC) திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்காப்பு நடவடிக்கையாகவே தாங்கள் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. “நீங்கள் எங்கள் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் உதவி மையங்களைச் சிதைத்தீர்கள், ஆனால் நாங்கள் அதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை” என்று அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. அதே சமயம், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் பிராந்திய நாடுகளின் மின் நிலையங்கள் மீது நிச்சயம் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், அமெரிக்கப் பங்குதாரர்களைக் கொண்ட பொருளாதார மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளும் ஈரானின் இலக்காக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு முடிவடைந்த நிலையில், அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “வலிமையின் மூலம் அமைதி” (Peace through strength) என்று பதிவிட்டுள்ளார். இது ஈரானின் எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்கா ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. ஹார்மஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருந்தால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படும் என்பதால் சர்வதேச சமூகம் இந்த நகர்வுகளைக் கவலையுடன் கவனித்து வருகிறது.
இந்த போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இந்திய பங்குச் சந்தையில் இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் சுமார் 11 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் போர் நீடிக்கும் என்ற அச்சம் காரணமாக ஆசிய சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. அமெரிக்கா இன்று தனது அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால், அது மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஒரு முழு அளவிலான போருக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
