உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், கோரக்பூரில் நடைபெற்ற ‘நிஷாத் கட்சி’ பேரணியில் அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான சஞ்சய் நிஷாத் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத காணொளி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவர் மீண்டும் சமாஜ்வாதி கட்சியில் இணையக்கூடும் என்ற யூகங்கள் எழுந்த நிலையில், “சமாஜ்வாதி கட்சி எனக்கான கதவுகளை மூடிவிட்டது, நாங்கள் இப்போதும் எப்போதும் பாஜகவுடன்தான் இருக்கிறோம்” என்று கூறி அந்த யூகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நிஷாத் சமூகத்தினரை ஒன்றிணைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை சஞ்சய் நிஷாத் மீண்டும் வலுவாக முன்வைத்தார். நிஷாத் சமூகத்தின் உரிமைகளைப் பறித்தது உயர் சாதியினர் அல்ல, மாறாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள்தான் என்று அவர் கடுமையாகச் சாடினார். 2019 முதல் பாஜகவின் வெற்றிக்குத் துணையாக இருந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும், பிரதமர் மோடி தங்கள் சமூகத்திற்கு அளிக்கும் மரியாதையை மதிப்பதாகவும் உருக்கமாகத் தெரிவித்தார்.
தனது அரசியல் எதிர்காலம் மற்றும் கூட்டணி நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்திய சஞ்சய் நிஷாத், பாஜக கூட்டணியிலேயே நீடிக்கப்போவதை உறுதி செய்துள்ளார். இருப்பினும், இட ஒதுக்கீடு விவகாரத்தில் தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் சஞ்சய் நிஷாத்தின் இந்தக் கண்ணீரும், இட ஒதுக்கீடு கோரிக்கையும் உத்தரப் பிரதேச அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், பாஜக இதனை எவ்வாறு கையாளப் போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#WATCH | Sultanpur: Uttar Pradesh Minister Sanjay Nishad says, “I was with the Samajwadi Party, they closed the door for me. The issue of reservation is our party’s issue,… They (BJP) have done very good work; Prime Minister Modi is giving respect, they are working to bring our… pic.twitter.com/e8bifddfSP
— ANI (@ANI) March 23, 2026
