விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே நிகழ்ந்த இந்த கொடூரக் கொலைச் சம்பவம், சந்தேகப் பேய் ஒரு அழகான குடும்பத்தை எப்படிச் சிதைக்கும் என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. சின்னசெவலை கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான டிரைவர் கோவிந்தன், தனது மனைவி ரேணுகாவின் நடத்தையில் சந்தேகமடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த மோதல் முற்றிய நிலையில், கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்ற ரேணுகா, காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். இது கோவிந்தனின் மனதில் வன்மத்தை மேலும் அதிகரித்தது.
பிரிந்து சென்ற மனைவியை வழிவாங்கத் துடித்த கோவிந்தன், நேற்று இரவு 9 மணி அளவில் ரேணுகா வீட்டின் அருகே உள்ள முள்தோப்பிற்குச் சென்றபோது அங்கு மறைந்திருந்துத் தாக்கினார். கையில் வைத்திருந்த கத்தியால் ரேணுகாவின் தலையில் சரமாரியாக வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து அங்கேயே சரிந்து விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு மக்கள் திரண்டு வந்ததைக் கண்ட கோவிந்தன், இருட்டில் தப்பியோடி மறைந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பலத்த காயமடைந்த ரேணுகாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர வேட்டையில் இறங்கி, அதே பகுதியில் பதுங்கியிருந்த கோவிந்தனை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவத்தால் மூன்று ஆண் குழந்தைகளின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகி நிற்கிறது. தாயைப் பறிகொடுத்துவிட்டு, தந்தை சிறைக்குச் சென்ற நிலையில், அனாதையாக நிற்கும் அந்தச் சிறுவர்களின் நிலை கண்டு ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஒரு கணவனின் தேவையற்ற சந்தேகமும், ஆத்திரமும் ஒரு உயிரைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு முழு குடும்பத்தின் நிம்மதியையும் அடியோடு குலைத்துவிட்டது.
