வயிற்றுக்குள் 26 ஹேர் பேண்டுகள்…! உயிருக்கு போராடிய பூனை… எக்ஸ்-ரே பார்த்து ஆடிப்போன மருத்துவர்கள்… அமெரிக்காவில் வினோத சம்பவம்…!!

By Devi Ramu on பங்குனி 23, 2026

Spread the love

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ‘மிட்நைட்’ என்ற 6 வயது வளர்ப்புப் பூனை, உயிருக்கு ஆபத்தான நிலையில் விலங்குகள் காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதன் குடல் பகுதியில் ஏற்பட்ட அடைப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்யத் தீர்மானித்தனர். அப்போது பூனையின் வயிற்றிலிருந்து ஒன்றல்ல இரண்டல்ல, மொத்தம் 26 ஹேர் பேண்டுகள் வெளியே எடுக்கப்பட்டன. வீட்டில் கவனக்குறைவாகப் போடப்பட்டிருந்த இந்த சிறிய ரப்பர் பேண்டுகளை பூனை ஒவ்வொன்றாக விழுங்கியதே இந்த உயிருக்கு ஆபத்தான நிலைக்குக் காரணமாக அமைந்தது.

நிலைமை மோசமடைந்ததால் அந்தப் பூனை பிழைக்க வாய்ப்பில்லை எனக் கருதப்பட்டாலும், மருத்துவக் குழுவினர் விடாமுயற்சியுடன் போராடி அதன் உயிரைக் காப்பாற்றினர். தற்போது அந்தப் பூனை மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறது. இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் ஹேர் பேண்ட், நூல் கண்டு போன்ற சிறிய பொருட்களை வீட்டில் சிதறி கிடக்க விடாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், விளையாட்டாக பூனைகள் விழுங்கும் இத்தகைய பொருட்கள் அவற்றின் உயிருக்கே உலையாக மாறிவிடும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.