மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் டிமோனா (Dimona) மற்றும் அராத் (Arad) ஆகிய நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேலின் முக்கிய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள டிமோனா நகருக்கு மிக அருகில் இந்த ஏவுகணைகள் விழுந்து வெடித்தன. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில், வானிலிருந்து ராட்சத ‘நெருப்புப் பந்துகள்’ (Fireballs) விழுவதையும், அதன் தாக்கத்தால் வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சுக்குநூறாக உடைந்து சிதறுவதையும் காண முடிகிறது.
HORRIFYING FOOTAGE: Inside an apartment hit by an Iranian missile in southern Israel pic.twitter.com/1NqaoD8ODA
— Israel War Room (@IsraelWarRoom) March 21, 2026
இந்தத் தாக்குதலில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி, குறைந்தது இரண்டு ஏவுகணைகள் அணு ஆராய்ச்சி மையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளன. ஈரானின் நதான்ஸ் (Natanz) அணுசக்தி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. டிமோனா நகரம் “சிறிய இந்தியா” (Little India) என்று அழைக்கப்படும் அளவிற்கு இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், இந்தச் சம்பவம் இந்தியாவிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இது மிகவும் கடினமான இரவு” என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் மக்கள் தொகையை இலக்கு வைத்துப் பெரும் அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். அணு ஆராய்ச்சி மையத்திற்குப் பாதிப்பு இல்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியிருந்தாலும், மிக முக்கியமான பாதுகாப்பு வளையத்திற்குள் ஏவுகணைகள் ஊடுருவியிருப்பது இஸ்ரேலுக்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் போர் தற்போது மிக ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.
