அரியானா மாநிலம் குருகிராமில் வரதட்சணை கொடுமையால் திருமணமான நான்கே மாதத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவராலேயே விஷ ஊசி செலுத்தி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேடியாலஜிஸ்ட்டாக பணிபுரியும் அருண் சர்மா மற்றும் செவிலியர் காஜல் ஆகிய இருவரும் காதலித்து, கடந்த நவம்பர் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
இருப்பினும், திருமணமான சில நாட்களிலேயே கூடுதல் வரதட்சணை மற்றும் பணம் கேட்டு காஜலை அவரது கணவர் அருண் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ஹோலி பண்டிகைக்காக காஜலின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் அருண் சர்மா தனது மனைவிக்குத் தெரியாமல் உடலில் விஷ ஊசியைச் செலுத்தியுள்ளார்.
மேலும் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது காஜல் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கு கண்டெடுக்கப்பட்ட ஊசி மற்றும் காஜலின் மரணம் குறித்துப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அருண் சர்மா தனது மனைவியை விஷ ஊசி போட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
