அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமுழியம் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை மயானத்தில் தகனம் செய்யும் பணியில் தங்கராசு உள்ளிட்ட சிலர் ஈடுபட்டனர். மறுநாள் காலை சிதையைச் சோதித்தபோது உடல் முழுமையாக எரியாததைக் கண்டு, உறவினர்கள் மீண்டும் தீ மூட்டியுள்ளனர். அதன் பின்னரே எரியூட்டும் பணியில் உதவிய தங்கராசுவைக் காணவில்லை என்பது தெரியவந்தது.
சந்தேகமடைந்த கிராம மக்கள் எரியூட்டப்பட்ட சிதையின் சாம்பலை விலக்கிப் பார்த்தபோது, அங்கு இரண்டு மண்டை ஓடுகள் இருந்ததைக் கண்டு உறைந்து போயினர். மதுபோதையில் இருந்த தங்கராசு, சடலத்தை எரிக்கும்போது நிலைதடுமாறி சிதைக்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விசித்திரமான மற்றும் சோகமான விபத்து குறித்து இரும்புலிகுறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
