ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை உற்பத்தித் திறனை முற்றிலுமாக முடக்கிவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அதிரடியாக அறிவித்துள்ளார். ஈரானால் இனி யுரேனியத்தைச் செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கவோ முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். தெஹ்ரானின் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் மற்றும் அணு ஆயுதங்களுக்கான பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளைத் தங்களது ராணுவம் அழித்து வருவதாகவும், இந்த யுத்தத்தில் இஸ்ரேல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்தத் தாக்குதல்கள் குறித்த அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் எதையும் இஸ்ரேல் தரப்பு இன்னும் வெளியிடவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் இணைந்து இஸ்ரேல் எடுத்து வரும் இந்த ராணுவ நடவடிக்கைகள், சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவை இந்தப் போருக்குள் இஸ்ரேல் இழுத்துவிட்டதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்த நேதன்யாகு, அமெரிக்காவின் நலன் கருதியே அதிபர் ட்ரம்ப் முடிவுகளை எடுப்பதாகவும், இரு நாடுகளின் உளவுத்துறையும் ராணுவமும் ஒருங்கிணைந்து மின்னல் வேகத்தில் இலக்குகளை எட்டி வருவதாகவும் கூறியுள்ளார். ஈரானின் ட்ரோன் கிடங்குகள் மற்றும் ஏவுகணைத் தளங்களைச் சிதைப்பதே தங்களது முதன்மை நோக்கம் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மறுபுறம், ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் வளைகுடா நாடுகளில் கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% பங்களிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. ஈரானின் இந்தத் தீவிரமான போர் நடவடிக்கைகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணியை நிலைகுலையச் செய்துள்ளதாகப் போர் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது ஒரு நீண்டகாலப் பொருளாதாரப் நெருக்கடியை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது. வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளங்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என 13-0 என்ற கணக்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவும் சீனாவும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன. உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் முட்டுக்கட்டை போடக்கூடாது என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. போரின் தீவிரம் குறையாத நிலையில், இது சர்வதேச அளவில் பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
