“33 வழக்குகள்.. 2 கொலைகள்.. 3 பாலியல் வன்கொடுமை!”… விளாத்திகுளம் குற்றவாளியின் கொடூரப் பட்டியல்… வெளியான திடுக்கிடும் தகவல்..!!

By Muthu Mani on பங்குனி 19, 2026

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் காயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர், இயற்கை உபாதைக்காகச் சென்ற பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட தர்ம முனீஸ்வரன் ஒரு சாதாரணக் குற்றவாளி அல்ல; ஏற்கனவே 33 வழக்குகளில் தொடர்புடைய ஒரு பழைய குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, மூன்று பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதோடு, இருவரைப் படுகொலையும் செய்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2020-ஆம் ஆண்டு, 60 வயது மூதாட்டி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில், தர்ம முனீஸ்வரனுக்கு 2022-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தண்டனையை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜாமீன் நிபந்தனைப்படி எட்டயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்றபோதுதான், தனியாகச் சென்ற மாணவியைப் பின்தொடர்ந்து சென்று இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளார். காற்றாலை அருகே மது அருந்திவிட்டு இந்த அராஜகத்தில் ஈடுபட்டதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

தர்ம முனீஸ்வரன் மிகவும் தந்திரமான குற்றவாளி என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரிய அளவிலான கொடும் குற்றங்களைச் செய்துவிட்டு, காவல்துறையின் தீவிரப் புலனாய்வில் இருந்து தப்பிக்க, வேண்டுமென்றே சிறு சிறு குற்றங்களைச் செய்து சிறைக்குச் செல்வதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். 2020 மூதாட்டி கொலை வழக்கின்போது கூட, ஒரு காவலருடன் வேண்டுமென்றே சண்டையிட்டுத் தாக்கி, ராமநாதபுரம் சிறைக்குச் சென்று தலைமறைவாக இருக்க முயன்றுள்ளார். இவர் மீது காவலர்களைத் தாக்கிய வழக்குகளும், வீடுகளுக்குள் புகுந்து திருடிய வழக்குகளும் ஏராளமாக உள்ளன.

   

சமூகத்தோடு ஒட்டாமல், குடும்பத்தினர் யாரும் இன்றித் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தர்ம முனீஸ்வரனின் இந்தச் செயல், ஜாமீனில் வெளிவரும் கொடும் குற்றவாளிகளைக் கண்காணிப்பதில் உள்ள சவால்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. ஒரு மாணவியின் உயிரைப் பறித்த இந்தக் கொடூரக் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுத்து வருகிறது. இந்த வழக்கு குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.