ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று (மார்ச் 16) அதிகாலை 2:30 முதல் 3 மணிக்குள் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ள ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாகத் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் வார்டில் சிகிச்சை பெற்று வந்த 10 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். அதே வேளையில், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மீட்பு குழுவினர் அந்த வார்டில் இருந்த மற்ற நோயாளிகளைப் பத்திரமாக மீட்டனர். அங்கிருந்த மற்ற நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையின் பாதுகாப்பான பிற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
