உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பிடி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான ஏக்தா ஆர்த்தி. இவருக்கும் அலோக் (என்ற) பப்லு என்பவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த மார்ச் 2-ம் தேதி அலோக் திடீரென மாரடைப்பால் காலமானார். தனது வாழ்க்கைத் துணையின் எதிர்பாராத மரணத்தால் ஏக்தா நிலைகுலைந்து போனார். ஏக்தாவின் பெற்றோரும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், கணவரின் மறைவுக்குப் பின் அவர் முற்றிலும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
கணவர் இறந்து 12 நாட்களான நிலையில், சனிக்கிழமை காலை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ஏக்தா ஒரு வீடியோ செய்தியைப் பதிவிட்டுள்ளார். அதில், “என் வாழ்க்கையின் அனைத்து ஆதரவும் முடிந்துவிட்டது; அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது” எனத் தனது இயலாமையை உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தனக்கு முறையான இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும் எனவும் அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டுக்காரர் சஞ்சீவ் திவாரி, அவரைத் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், ஏக்தாவின் தொலைபேசி தொடர்ந்து ‘பிஸி’யாகவே இருந்துள்ளது.
சிறிது நேரத்தில் ஏக்தா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த சதார் கோட்வாலி போலீசார், ஏக்தாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். “தனது கணவரின் பிரிவைத் தாங்க முடியாமல், ஆதரவற்ற நிலையில் இருந்த ஏக்தா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்” என்று போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
