தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் ‘இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு’ (IPDS) நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பு, அடுத்த சட்டமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளாகத் துல்லியமான கணிப்புகளை வழங்கி வரும் இந்த அமைப்பின் தரவுகள், தமிழகத்தின் எதிர்கால அரசியல் போக்கைச் சுட்டிக்காட்டும் விதமாக அமைந்துள்ளன. லயோலா(IPDS) கருத்துக்கணிப்பில், இளைஞர்களின் நம்.1 தேர்வாக விஜய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக, விசிக, நாதக, அதிமுக, பாஜக என்ற வரிசையில் பிற கட்சிகளின் வாக்குகளை விஜய் உடைப்பார் என கூறப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக யாரைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார். எனினும், அவருக்கு மிக நெருக்கமான போட்டியாளராக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது, தமிழக அரசியலில் இருமுனைப் போட்டி வலுப்பெறுவதை உணர்த்துகிறது.
குறிப்பாக, நகர்ப்புற பகுதிகளில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்கு வங்கியின் அடிப்படையில் கணக்கிடும்போது, சில பகுதிகளில் விஜய் தலைமையிலான தவெக கட்சி, திமுக மற்றும் அதிமுகவைக் காட்டிலும் முன்னிலையில் இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது அரசியல் களத்தில் புதிய மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், முதல்வர் ஸ்டாலின் மக்களின் ஆதரவில் முதலிடத்தில் இருந்தாலும், வாக்கு வங்கிக் கணக்கீட்டின்படி விஜய் அவருக்குக் கடும் சவாலாகத் திகழ்கிறார். இதன் மூலம் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பு தேர்தல் களத்தில் பெரும் அரசியல் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
