ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனி (Mojtaba Khamenei) மற்றும் அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் குறித்த தகவல்களைத் தருபவர்களுக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் ₹92 கோடி) வெகுமதி அளிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலில் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி இந்தப் பதவிக்கு வந்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் “நீதிக்கான வெகுமதிகள்” (Rewards for Justice) திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொஜ்தபா காமேனி தவிர, ஈரானின் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மோமேனி மற்றும் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உள்ளிட்ட 10 முக்கிய அதிகாரிகளின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் பயங்கரவாதச் செயல்களைத் திட்டமிட்டு செயல்படுத்தும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அமைப்பை வழிநடத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
தகவல் அளிப்பவர்களின் பாதுகாப்பிற்காக சிக்னல் (Signal) போன்ற பாதுகாப்பான செயலிகள் மூலம் தகவல்களைத் தெரிவிக்கலாம் என்றும், தகுதியுள்ளவர்களுக்கு வேறு இடத்திற்குச் சென்று குடியேற (Relocation) உதவி செய்யப்படும் என்றும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் புதிய தலைமைக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
