மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது. குறிப்பாக, தெஹ்ரான், ஷிராஸ் மற்றும் அஹ்வாஸ் ஆகிய நகரங்களில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தொடங்கிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. “ஆபரேஷன் எபிக் ஃப்யூரி” என்ற பெயரில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஈரானின் 3,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தாக்குதலின் வேகம் குறைய வாய்ப்பில்லை என்று அமெரிக்க தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த ராணுவ மோதல் ஈரான் எல்லைகளைத் தாண்டி லெபனானையும் பாதித்துள்ளது. லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக பெய்ரூட் மற்றும் பெக்வா வேலி பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இந்த முத்தரப்பு மோதலால் மத்திய கிழக்கு பிராந்தியம் மிகுந்த போர் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இரு தரப்பும் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருவதால், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி உலகளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் சூழல் சர்வதேச பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழலில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
