இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘தி ஹன்ட்ரட்’ தொடருக்கான ஏலத்தில், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சுமார் 2.34 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. சன் குழுமத்திற்குச் சொந்தமான இந்த அணி, இந்திய எல்லைப் பாதுகாப்பு மற்றும் ராணுவ வீரர்களைக் கேலி செய்ததாகக் கூறப்படும் ஒரு வீரரைத் தேர்ந்தெடுத்தது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறிப்பாக, இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் வர்த்தமானை அப்ரார் அகமது கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் அவமதித்ததாகக் கூறி, கிரிக்கெட் ரசிகர்கள் போன்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தேச உணர்வை விட வணிக லாபமே முக்கியமா என்று கேள்வி எழுப்பியுள்ள நெட்டிசன்கள், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைப் புறக்கணிக்க வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்திய உரிமையாளர்களைக் கொண்ட ஒரு அணி, இந்தியாவிற்கு எதிரான கருத்துகளைக் கொண்ட வீரருக்கு இவ்வளவு பெரிய தொகையை வழங்கியதை ஏற்க முடியாது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். காவ்யா மாறன் தலைமையிலான நிர்வாகம் இந்த விவகாரத்தில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த எதிர்ப்பு வரும் ஐபிஎல் தொடரிலும் அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
