“வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்”… “பாட்டிலை தூக்கிக்கிட்டு வராதீங்க!” – பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் போட்ட புது ரூல்… !!!

By Muthu Mani on பங்குனி 13, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் காரணமாக, வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் வணிக எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர்கள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உணவகங்களில் உணவுகளின் விலை உயர்ந்துள்ளதுடன், சில இடங்களில் எரிவாயு கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தி காட்டுத்தீயாகப் பரவியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் கடந்த மூன்று நாட்களாகக் கூட்டம் கூட்டமாக அலைமோதி வருகின்றனர். தங்களுக்குத் தேவையான எரிபொருளை முன்கூட்டியே சேமித்து வைக்கும் நோக்கில், வாகனங்களுக்குத் தாண்டி கேன்கள் மற்றும் பாட்டில்களிலும் பெட்ரோல் வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்து வருகின்றனர்.

   

பொதுமக்களின் இத்தகைய பீதியைக் கட்டுப்படுத்தவும், தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, இனிமேல் பாட்டில்கள் மற்றும் கேன்களில் பெட்ரோல் அல்லது டீசல் விற்பனை செய்யப்பட மாட்டாது என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு மட்டுமே நேரடியாக எரிபொருள் நிரப்பப்படும் என்றும், பங்க் உரிமையாளர்கள் இந்த விதிமுறையைத் தீவிரமாகப் பின்பற்றி வருவதாகவும் சங்கத்தின் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

   

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தட்டுப்பாடு இல்லை என்றும், தேவையான அளவு இருப்பு உள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் தரப்பில் மீண்டும் மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் பாட்டில்களில் பெட்ரோல் கிடைக்காததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தவிர்க்கப் பல பெட்ரோல் பங்க்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வதந்திகளை நம்பி பொதுமக்கள் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என்று அரசு மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.