ஐதராபாத்திலிருந்து தாய்லாந்தின் புக்கெட் நகருக்கு 133 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பியது. புக்கெட் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கியபோது, விமானம் மிக பலமாக மோதியதில் அதன் முன்பகுதி சக்கரம் உடைந்து துண்டானது.
இந்த எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தில் சரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழலில், விமானத்திலிருந்த 133 பயணிகளும் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும் விபத்தைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்தச் சம்பவம் காரணமாக புக்கெட் விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டு, மற்ற விமானச் சேவைகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
