மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஈரான் தனது தாக்குதல் வியூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இனி வரும் போர் என்பது வெறும் எல்லைகளுடன் மட்டும் நின்றுவிடாது, அது ‘கட்டமைப்பு போர்’ ஆக மாறும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேலுக்கு தொழில்நுட்ப ரீதியாக ஆதரவளிக்கும் அமெரிக்காவின் முன்னணி ஐடி மற்றும் டெக் நிறுவனங்களை தங்களது அடுத்தகட்ட இலக்குகளாக ஈரான் அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரானின் புரட்சிகரக் காவல் படைக்கு நெருக்கமான செய்தி நிறுவனம், இஸ்ரேலிய ராணுவத்துடன் கைகோர்த்துச் செயல்படும் முன்னணி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கூகுள், மைக்ரோசாஃப்ட், என்விடியா மற்றும் ஐபிஎம் போன்ற ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ளனர். இஸ்ரேலிய அரசுடன் இந்த நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள ‘நிம்பஸ்’ போன்ற கிளவுட் ஒப்பந்தங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ராணுவத் தொழில்நுட்ப உதவிகளே ஈரானின் இந்த கோபத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ஈரான் வெளியிட்டுள்ள இந்த ‘டார்கெட்’ பட்டியலில் இஸ்ரேலில் உள்ள அலுவலகங்கள் மட்டுமின்றி, சில வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள இந்த நிறுவனங்களின் தரவு மையங்களும் இடம்பெற்றுள்ளன. “எங்கள் எதிரிக்குத் தொழில்நுட்ப ரீதியாகத் துணை நிற்கும் எவரும் தப்ப முடியாது” என்று ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை, வளைகுடா நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனால் சைபர் தாக்குதல்கள் மட்டுமின்றி, நேரடியாக உள்கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த அறிவிப்பு சர்வதேச தொழில்நுட்பச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை ஈரான் தனது எச்சரிக்கையைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தால், அது உலகளாவிய கிளவுட் சேவைகள், தரவுப் பாதுகாப்பு மற்றும் இணையச் சேவைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சிலிக்கான் வேலி வரை நீண்டுள்ள இந்த மோதலை அமெரிக்கா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதும், பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வாஷிங்டன் எந்த மாதிரியான பாதுகாப்பை வழங்கப் போகிறது என்பதும் தற்போது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
