“பாஜகவுக்கு 29, அமமுகவுக்கு 9″… அதிமுக கூட்டணியில் அடுத்த ‘ட்விஸ்ட்’ இதுதானா?… எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு….!

By Nanthini on பங்குனி 10, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் மந்தமாக இருந்தாலும், திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பாஜக மற்றும் அமமுக போன்ற முக்கிய கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து அதிமுக தலைமை உறுதியான முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

பாஜக தரப்பில் முதலில் 60 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி அதனை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் பாஜக தனது கோரிக்கையை 30 ஆகக் குறைத்தபோதும், அதையும் ஏற்க அதிமுக தலைமை தயங்கியது. இறுதியில், காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளதை விட ஒரு தொகுதி கூடுதலாக, அதாவது 29 தொகுதிகளை பாஜகவிற்கு ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும், இதற்கு பாஜக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

   

அதேபோல், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு (அமமுக) 9 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளது. அமமுக தரப்பில் கூடுதல் தொகுதிகள் கோரப்பட்டாலும், அதிமுக தலைமை 9 தொகுதிகளில் மட்டுமே உறுதியாக உள்ளது. மேலும், அன்புமணி ராமதாஸின் பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், பிற சிறிய கட்சிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

தொகுதிப் பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மார்ச் 14-ஆம் தேதிக்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 11 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசவிருப்பதால், அதன்பிறகு தொகுதிப் பங்கீடு உடன்பாடு முழுமையாக இறுதி செய்யப்படும் என்று அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம், அதிமுக தனது தலைமையிலான கூட்டணியை வலிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.