கையெழுத்து 5,000, கையில் 3000… லஞ்சம் கேட்ட பாஜக பெண் நிர்வாகி… அதிர வைக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பு…!!

By Soundarya on பங்குனி 9, 2026

Spread the love

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பட்டணம் புதூர் பாஜகவில், கட்சி வழங்கிய தேர்தல் பிரச்சார நிதியில் பெண் நிர்வாகி கமிஷன் கேட்டதாக எழுந்துள்ள புகார் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் நடத்தப்படும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களுக்காக தலைமை தலா 5,000 ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்த நிதியைப் பெற வேண்டுமானால் சூலூர் தெற்கு மண்டலப் பொறுப்பாளர் சுபாஷினிக்கு ஒவ்வொரு சக்தி கேந்திரமும் 2,000 ரூபாய் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வற்புறுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சக்தி கேந்திரப் பொறுப்பாளர் சந்தோஷ் வெளியிட்டுள்ள ஆடியோவில், தங்களைப் போன்ற 19 சக்தி கேந்திரங்களிடமும் தலா 2,000 ரூபாய் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதை வேதனையுடன் பகிர்ந்துள்ளார். தலைமை கொடுத்த 5,000 ரூபாயில் 3,000 ரூபாயை மட்டும் பெற்றுக்கொள்ளுமாறு மண்டலத் தலைவர்கள் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், ஆனால் 5,000 ரூபாய் பெற்றுக் கொண்டதாக மட்டும் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கட்சி பணிகளுக்காகத் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து வரும் நிலையில், தலைமை தரும் ஊக்கத்தொகையிலும் இப்படி கைவைப்பது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

பணத்திற்காகத் தாங்கள் கட்சி வேலை செய்யவில்லை என்றாலும், மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஊக்குவிக்க வழங்கப்பட்ட முழுத் தொகையையும் வழங்க வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என அந்த ஆடியோவில் சந்தோஷ் உருக்கமாகப் பேசியுள்ளார். “மண்டலத் தலைவருக்கு எதற்காக நாங்கள் 2,000 ரூபாய் தர வேண்டும்?” என்ற கேள்வியுடன், கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்குச் சேர வேண்டிய நிதியை முழுமையாக வழங்கக் கோரி அவர் புலம்பும் இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது