அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் அவரை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் மதுரையில் நடைபெற்ற இணைப்பு விழாவில் ஓபிஎஸ் கலந்துகொண்டதைச் சுட்டிக்காட்டிய உதயகுமார், ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லிப் பதவிகளையும் செல்வாக்கையும் அனுபவித்தவர், இன்று அதே ஜெயலலிதாவை வீழ்த்த நினைத்தவர்களுடன் கைகோர்த்திருப்பது வரலாற்றுத் துரோகம் என்று சாடியுள்ளார்.
இதனால் ஸ்டாலினை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு ஓபிஎஸ்-க்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என்றும், இது வேதனையின் உச்சம் என்றும் அவர் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் துரோகச் செயலுக்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்றும், இந்தப் பாவம் அவரது தலைமுறை வரை தொடரும் என்றும் உதயகுமார் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் “கங்கையில் குளித்தாலும் இந்தப் பாவம் உங்களை விடாது” என்று சாபம் விடுத்துள்ள அவர், அதிமுகவின் ரத்தத்தை உறிஞ்சிவிட்டு இன்று எட்டப்பராக மாறி கட்சியை அடகு வைக்கத் துணிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் துரோகத்தின் அடையாளமாக விளங்கும் ஓபிஎஸ்-க்கு தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும், இறுதியில் தர்மமே வெல்லும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
