இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அதிநவீன ரோபோக்கள் தயாரிக்கப்பட உள்ளன. இமயமலைப் பகுதிகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிலவும் -40°C கடும் குளிரையும் தாங்கி, இந்த ரோபோக்கள் திறம்படச் செயல்படும் திறன் கொண்டவை. நாட்டின் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில், சீனா போன்ற வல்லரசு நாடுகளின் தொழில்நுட்பத்திற்கு நிகராக இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், இந்த ரோபோக்களின் முதல் முன்மாதிரி (Prototype) அடுத்த ஆண்டு தயாராகிவிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடினமான நிலப்பரப்புகளில் மனிதர்களால் நீண்ட நேரம் ரோந்துப் பணியில் ஈடுபடுவது சவாலான காரியம் என்பதால், அந்த இடங்களை இந்த ரோபோக்கள் நிரப்பும். இதன் மூலம் எல்லைப் பாதுகாப்புப் பணியில் வீரர்களுக்கு ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என்பதோடு, 24 மணி நேரமும் துல்லியமான கண்காணிப்பை உறுதி செய்ய முடியும்.
நாக்பூரில் அமையவுள்ள இந்தத் தயாரிப்பு மையம், இந்தியப் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு (Atmanirbhar) கொள்கையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த அதிநவீன ரோபோக்கள் எல்லை தாண்டிய ஊடுருவல்களைக் கண்டறியவும், எதிரிகளின் நடமாட்டத்தைத் தானியங்கி முறையில் கண்காணிக்கவும் உதவும். இதன் மூலம் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் பணிகள் அடுத்தகட்டத்திற்கு உயரும் என்றும், தொழில்நுட்ப ரீதியாக இந்திய ராணுவம் மேலும் வலிமையடையும் என்றும் முதல்வர் ஃபட்னவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
