திருச்சியில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், இரண்டு நாய் குட்டிகளை சுவற்றில் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனாட்சி மிஸ்ரா என்பவர், தனது வீட்டின் முன் கோலமிட்ட அண்டை வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோதலின் போது தனது 3 வயது மகனுக்கு காயம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அவர், அங்கிருந்த இரண்டு சிறிய நாய் குட்டிகளைத் தூக்கி சுவற்றிலும் சாலையிலும் கொடூரமாக அடித்துள்ளார். இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த வீடியோவைக் கண்டு கொதிப்படைந்த விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், ஜீயபுரம் காவல்துறையினர் மீனாட்சி மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். ஒரு நிமிடம் நிதானமிழந்து செய்த இந்த கொடூரச் செயலால், அந்தப் பெண் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அதே சமயம், மீனாட்சியின் குழந்தையைத் தாக்கியதாகக் கூறப்படும் அண்டை வீட்டுப் பெண் புவனேஸ்வரி மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒரு சிறிய தகராறு மற்றும் ஆத்திரத்தால் எடுக்கப்பட்ட தவறான முடிவு, அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி, அவரை சட்டத்தின் முன் குற்றவாளியாக நிறுத்தியுள்ளது.
