தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றி கழகம் (தவெக) வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. ஆனால், கட்சித் தலைமையிடம் இருந்து பெறப்பட்ட விருப்ப மனுக்களில் பெரும்பாலானவை மீண்டும் சமர்ப்பிக்கப்படாமல் போனது கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முக்கியக் காரணமாக, தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு தொகுதிக்கும் வெறும் 3 பேரிடம் மட்டுமே நேரடியாக நேர்காணல் நடத்தத் திட்டமிட்டுள்ளது சொல்லப்படுகிறது. பொதுவாக, விருப்ப மனு அளிப்பவர்கள் தங்கள் தலைவரைச் சந்தித்து உரையாடுவதையே பெருமையாகக் கருதுவர். ஆனால், இந்த முறை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கே விஜய்யைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவல் லீக் ஆனதால், பல நிர்வாகிகள் விருப்ப மனு அளிக்காமல் பின்வாங்கியுள்ளனர்.
தங்கள் தலைவரைச் சந்திக்கவே வாய்ப்பில்லை எனும்போது, எதற்காகப் பெரும் தொகையைச் செலுத்தி விருப்ப மனு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தொண்டர்களிடையே பரவியுள்ளது. இதனால், எதிர்பார்த்த அளவிற்குக் கட்சித் தலைமைக்கு மனுக்கள் வந்து சேரவில்லை. இந்தச் சூழலைச் சமாளிக்க, அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலமாகவே தகுதியான வேட்பாளர்களை அடையாளம் காணத் தற்போது தலைமை திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களுடன் மட்டும் விஜய் புகைப்படம் எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது சாதாரணத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே அதிருப்தியை அதிகரித்துள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இழுபறியில் இருக்கும் நிலையில், உட்கட்சிக்குள்ளேயே வேட்பாளர் தேர்வில் எழுந்துள்ள இந்தச் சிக்கல் தவெக தலைமைக்கு ஒரு சவாலாகவே மாறியுள்ளது.
