#BREAKING: அசாமில் மாயமான போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது… இந்திய விமானப்படை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

By Soundarya on பங்குனி 6, 2026

Spread the love

அசாம் மாநிலத்தின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான Su-30 MKI ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்ஹாட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், ரேடார் தொடர்பிலிருந்து திடீரென துண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது அது கீழே விழுந்து நொறுங்கியுள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜோர்ஹாட் நகரில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ரேடார் தொடர்பிலிருந்து மாயமான உடனேயே தேடுதல் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், விமானம் நொறுங்கிக் கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களைத் தேடும் பணிகள் தற்போது அந்த மலைப்பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

   

இந்த விபத்தின்போது விமானத்தில் இருந்த விமானியின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவர் பாராசூட் மூலம் உயிர் தப்பினாரா அல்லது விபத்தில் சிக்கினாரா என்பது குறித்த தேடுதல் வேட்டை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.