தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்குப் பின், அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த ரசிகர்கள் விபத்தில் சிக்கினர். இந்த விபத்துக்குக் காரணம், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை வாகனம் திடீரென ரிவர்ஸ் (பின்னோக்கி) எடுக்கப்பட்டதே என்று சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவியது. இதனால் காவல்துறையினரின் கவனக்குறைவே விபத்திற்குக் காரணம் எனப் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இருப்பினும், இந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு (TN Fact Check) விளக்கம் அளித்துள்ளது. உண்மையில், திருச்சியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி விஜய்யின் வாகனம் சென்றபோது, அதனைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த ரசிகர்கள், சாலையோரத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தைக் கவனித்திடாமல் அதன் மீது மோதியுள்ளனர். போலீஸ் வாகனம் நகராமலேயே இருந்த நிலையில், ரசிகர்களின் அதிவேகப் பயணமே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உட்பட மொத்தம் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அதில் விக்னேஷ் என்ற மாணவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே சமயம், விபத்து நடந்தபோது அங்கு வந்த இரண்டு ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடாமல் தொண்டர்கள் வாகனங்களை ஓட்டிச் சென்றது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
