திருச்சியில் உள்ள அரசு உதவி பெறும் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இது ஒட்டுமொத்த திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாகும் என்று சாடியுள்ளார். மேலும், பாதுகாப்பற்ற சூழலில் குழந்தைகள் இருக்கும் நிலை வேதனை அளிப்பதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறும் எந்த அரசும் தன்னை “மக்கள் நல அரசு” என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றது என்று விஜய் காரசாரமாக விமர்சித்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காதவாறு காப்பகங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
