“சட்டை என்னுடையது… மாப்பிள்ளை அவர்தான்”…. எடப்பாடி கையில் எடப்பாடி இல்லையா?…. அமித்ஷாவின் ‘ரிமோட் கண்ட்ரோல்’ அரசியலால் அதிரும் அதிமுக கோட்டை….!

By Nanthini on பங்குனி 1, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளைத் தனிக்குழுக்கள் அமைத்து லாவகமாகக் கையாண்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் நிலைமை தலைகீழாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, அதிமுகவின் உள்கட்சி விவகாரங்கள் மற்றும் கூட்டணி முடிவுகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையீடு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவது அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே (ரத்தத்தின் ரத்தங்கள்) பெரும் குமுறலை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு மற்றும் ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு என அனைத்திலும் டெல்லித் தலைமையின் கரங்களே ஓங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள், யார் யாருக்கு எந்தத் தொகுதி என்பதை அதிமுக தலைமை முடிவு செய்வதற்கு முன்பே, பாஜக தரப்பிலிருந்து பட்டியல்கள் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. ‘மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது’ என்ற பழமொழிக்கு ஏற்ப, அதிமுக தலைமையில் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி கூறினாலும், நிஜத்தில் பாஜகவே அனைத்தையும் கட்டுப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

   

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை, பிரதமராக இருந்தாலும் சரி, டெல்லி தலைவர்களாக இருந்தாலும் சரி, போயஸ் தோட்டத்திற்கு வந்துதான் அரசியல் பேசுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது அமித் ஷாவோ அல்லது மோடியோ மதுரை போன்ற இடங்களுக்கு வரும்போது, அவர்களுக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி அங்கு ஆஜராவது அதிமுகவின் தனித்தன்மையைச் சிதைப்பதாகத் தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்காக அதிமுகவினர் காட்டும் அதீத ஆர்வம், அவர்கள் பாஜகவை விட அதிகமாகக் கூவுகிறார்களோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

   

ஒட்டுமொத்தத்தில், திமுக தனது கூட்டணியை ஒரு கட்டுக்கோப்பான அதிகாரத்துடன் வழிநடத்தி வரும் வேளையில், அதிமுக தனது பிடியைத் தளரவிட்டு டெல்லி தலைவர்களின் ‘அண்டர் கண்ட்ரோலில்’ சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆதிக்கம் எதிர்வரும் தேர்தலில் அதிமுகவிற்குச் சாதகமாக அமையுமா அல்லது அக்கட்சியின் செல்வாக்கை மேலும் பலவீனப்படுத்துமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி இந்த அழுத்தங்களைச் சமாளித்து கட்சியை எப்படிக் காக்கப்போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.