2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த காலங்களில் தமிழக அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாகவும், 5 முதல் 8 சதவீத வாக்குகளைத் தக்கவைத்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தற்போது ஒரு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வருகிறார். வரவிருக்கும் தேர்தலில் வலுவான கூட்டணி அமையாததால், தைலாபுரம் தோட்டம் அரசியல் ரீதியாக ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
ஆளுங்கட்சியான திமுக-வுடன் கூட்டணி வைக்க பாமக தரப்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், திமுக கூட்டணியில் ஏற்கனவே கட்சிகள் நிரம்பி வழியும் நிலையில், புதியவர்களுக்கு இடமில்லை என அறிவாலயம் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. குறிப்பாக, பாமக கூட்டணியில் இணைந்தால் தாங்கள் வெளியேறுவோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், திமுக பாமக-வை ஒதுக்கி வைத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கதவுகள் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் (தவெக) கைகோர்க்க ராமதாஸ் தரப்பு தூது அனுப்பியது. இதற்காக ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் “தனித்துவமாகப் போட்டியிட விரும்புகிறோம்” என விஜய் தரப்பு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தங்களுக்கு ஆதரவாக இருக்கும் தலித் மக்களின் வாக்குகளை இழக்க விரும்பாததாலேயே விஜய் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
தற்போதுள்ள இக்கட்டான நிலையில், வேறு வழியின்றி மீண்டும் அதிமுக-வையே பாமக நாட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே அதிமுக-வுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைய ராமதாஸும் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் மூலம் இதற்கான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் தேர்தலில் மாம்பழம் மீண்டும் இலைக்கு அடியில் தஞ்சம் அடையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
