இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ (Epstein Files) விவகாரம் குறித்துப் பாடகி சின்மயி தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக சமூக வலைதளப் பயனர் ஒருவர், சின்மயியின் தந்தையையும் அவரையும் தொடர்புபடுத்தி மிகவும் தரக்குறைவான மற்றும் வன்மமான கருத்தைப் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து அந்த நபரின் மோசமான விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்த சின்மயி, “என் அப்பா என்னை அவ்வாறு செய்யவில்லை; ஆனால், தந்தையர்கள் தங்கள் மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்வதாக நீங்கள் கற்பனை செய்கிறீர்கள்” என்று ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பேசியதற்காகப் பெண்ணென்றும் பாராமல் இத்தகைய தனிநபர் தாக்குதல் நடத்தப்படுவது இணையவாசிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
