வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு விவாதம் எழுந்துள்ளது. சமீபத்தில் இந்த ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர், சீல் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட ‘புல்கா’ ரொட்டிகளை அப்படியே மைக்ரோவேவ் அடுப்பில் வைத்து சூடுபடுத்தி வழங்குவதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்த பிளாஸ்டிக் கவர்கள் மைக்ரோவேவ் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானவையா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். பிளாஸ்டிக் உறைகளை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தும் போது, அதிலிருந்து வெளியேறும் நச்சு இரசாயனங்கள் உணவில் கலந்து உடல்நலக் கேடுகளை விளைவிக்கும் என்ற அச்சத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
Public Health Issue Alert 🚨
Travelling on Vande Bharat today (Allahabad → Delhi) and yesterday was travelling on Rajdhani (Delhi → Allahabad), I was served rotis/kachoris heated directly inside sealed plastic packaging. While at Rajdhani, I was hungry and so ate the hot… pic.twitter.com/gIxM4U1d5N
— Avani Bansal (@bansalavani) February 18, 2026
இந்த விவகாரம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு குறித்துப் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் மற்றும் ஐஆர்சிடிசி (IRCTC) இத்தகைய செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், பயணிகளின் ஆரோக்கியத்தில் விளையாடக் கூடாது என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். நவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் போன்ற ரயில்களில் கூட, அடிப்படை உணவுப் பாதுகாப்பு விதிகள் மீறப்படுவது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாகச் சுற்றுச்சூழலுக்கும் உடல்நலத்திற்கும் உகந்த பேக்கேஜிங் முறைகளை ரயில்வே கையாள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
