தமிழகத்தில் வரும் மார்ச் 8-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள திமுகவின் பிரம்மாண்ட பிரசார மாநாட்டில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றவும், கூட்டணி கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தவும் திமுக திட்டமிட்டுள்ளது. இந்தச் சந்திப்பு தேசிய அளவிலும், தமிழக அரசியலிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் பிப்ரவரி 22-ம் தேதி முதல் பேச்சுவார்த்தை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களை 15 நாட்களுக்குள் இறுதி செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ராகுல் காந்தியின் வருகை கூட்டணிக்கு வலுசேர்க்கும் என நம்பப்படும் நிலையில், இதற்கான விரிவான ஏற்பாடுகளைத் திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்த மாநாட்டின் மூலம் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ பிரசாரத்தைத் தொடங்க திமுக கூட்டணி முழு வீச்சில் தயாராகி வருகிறது.
