பதவி போச்சு… MLA சீட்டாவது கிடைக்குமா..? தவெக அலுவலகத்திற்குச் சென்ற ‘போலி லெட்டர்’.. அஜிதா ஆக்னல் விவகாரத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை..!!

By Soundarya on மாசி 17, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக எழுந்துள்ள “போலி கடித” சர்ச்சை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த அஜிதா ஆக்னலை வேட்பாளராகப் பரிசீலிக்க வேண்டும் என முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்கம் சார்பில் அக்கட்சியின் தலைமைக்குக் கடிதம் அனுப்பப்பட்டதாகச் செய்திகள் பரவின. அஜிதா ஆக்னல் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, சாதி-மத வேறுபாடின்றி மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருவதால் அவர் வெற்றி வேட்பாளராக இருப்பார் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்தக் கடிதத்திற்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ளனர். சங்கத்தின் லெட்டர் பேடை யாரோ தவறாகப் பயன்படுத்தி, ஏமாற்றும் நோக்கில் இந்தச் சட்டவிரோதச் செயலைச் செய்துள்ளதாகச் சங்கத் தலைவர் கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளனர். குறிப்பாக, பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறவுள்ள பரதர் குல மாநாட்டைச் சிதைக்கும் நோக்கில் இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ள அவர்கள், போலி கடிதத்தைத் தயாரித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.