தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப். 17) தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், பெண் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். அரசுப் பணியில் உள்ள பெண்களின் மகப்பேறு விடுப்புக் காலம் தற்போதுள்ள 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக (ஓராண்டு) உயர்த்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். தாயையும் சேயையும் பராமரிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, அரசு பெண் ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தின் சுகாதாரக் குறியீடுகள் குறித்துப் பேசிய அமைச்சர், மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் ஆகியவை தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் மிகக் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை விளக்கும் வகையில், இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதத்தினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமிதமான தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார். பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
