ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரான விநாயக் பிரஜாபதி, ஒரு யூடியூப் சேனலை நடத்தி வந்தார். இதற்காக அவர் தனது பூர்வீகச் சொத்தை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு தனது வீட்டிலேயே சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் நவீன கருவிகளுடன் கூடிய ‘ஹோம் ஸ்டுடியோ’ ஒன்றை அமைத்திருந்தார். அதிக எதிர்பார்ப்புடன் தனது படைப்புகளைப் பதிவேற்றி வந்த விநாயக், நீண்ட நாட்களாகியும் தனது சேனலுக்குக் கணிசமான அளவில் சந்தாதாரர்களும் (Followers) ஆதரவும் கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்த விரக்தியின் உச்சத்தில், கடந்த சனிக்கிழமை இரவு தனது ஸ்டுடியோவிற்குள் சென்ற விநாயக், கதவைப் பூட்டிக்கொண்டு அங்கிருந்த உபகரணங்களுக்குத் தீ வைத்துள்ளார். வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கூச்சலிடவே, அண்டை வீட்டார்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பூட்டியிருந்த கதவை உடைத்து விநாயக் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தீ விபத்திலிருந்து பாதுகாப்பாக மீட்டனர். இதனால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும், இந்தத் தீ விபத்தில் ஸ்டுடியோவில் இருந்த விலை உயர்ந்த கணினிகள், கேமராக்கள், ஒலி அமைப்புகள் மற்றும் மின் விளக்குகள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகின. சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தீக்கிரையானதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் கிடைக்கும் புகழுக்காகவும், பிரபலமாவதற்காகவும் இளைஞர்கள் எத்தகைய மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதையும், அத்தகைய சூழலில் நிதானத்தை இழப்பது எத்தகைய இழப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் இந்தச் சம்பவம் ஒரு பாடமாக உணர்த்தியுள்ளது.
