தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங்கிலிருந்து சென்னைக்கு வந்த ‘தாய் ஏர்வேஸ்’ விமான பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது, சுற்றுலா விசாவில் சென்று திரும்பிய சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரது உடைமைகளைச் சோதனையிட்டனர். அந்த இளைஞரின் சூட்கேஸைத் திறந்தபோது, அதற்குள் உயிருடன் இருந்த அரிய வகை வெளிநாட்டு ஊர்வன விலங்குகளைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த சூட்கேஸில் ஆப்பிரிக்கப் பாலைவனங்களில் காணப்படும் 9 சல்கட்டா ஆமைகள், அமெரிக்கா மற்றும் கரீபியன் காடுகளில் வாழும் 4 அரிய வகை பல்லிகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் ‘ஈஸ்டன் வாட்டர் டிராகன்’ ஆகியவை இருந்தன. இவை தவிர, 12 ராயல் பைத்தான் மலைப்பாம்புகள், அல்பைனோ கார்ன் பாம்பு மற்றும் நீல நிற நாக்கு கொண்ட 3 விசித்திரமான உடும்புகள் என மொத்தம் 31 அபூர்வ உயிரினங்கள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பிடிபட்ட இளைஞரிடம் நடத்திய விசாரணையில், பெரும் பணக்காரர்கள் தங்களது பங்களாக்களில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்காக பல லட்சம் ரூபாய் கொடுத்து இந்த உயிரினங்களை வாங்கி வரச் சொன்னதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இது ஒரு பெரிய கடத்தல் கும்பலின் பின்னணி கொண்ட செயல் என்பதும் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட இந்த உயிரினங்களை அனுமதியின்றி கொண்டு வந்தது பெரும் சட்ட மீறலாகக் கருதப்படுகிறது.
இதனையடுத்து, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட 31 உயிரினங்களும் பாதுகாப்பான முறையில் அதே தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் மீண்டும் தாய்லாந்திற்கே திருப்பி அனுப்பப்பட்டன. இதற்கான போக்குவரத்துச் செலவுகள் அனைத்தும் பிடிபட்ட நபரிடமிருந்தே வசூலிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து ரகசிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
