“1000 ரூபாய்க்கு தங்கம்”… 250 பேரை நடுத்தெருவில் நிறுத்திய சென்னை தம்பதி… இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்….!

By Nanthini on மாசி 12, 2026

Spread the love

சென்னையில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி, பொதுமக்களிடம் சுமார் 55 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகர், தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் சீட்டு நடத்தி வந்துள்ளனர். மாதந்தோறும் 1,000 ரூபாய் செலுத்தினால் தீபாவளி பண்டிகையின் போது தங்க நகை, பட்டுப்புடவை மற்றும் பட்டாசுகள் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளனர்.

இந்த கவர்ச்சிகரமான திட்டத்தை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த சங்கீதவாணி என்பவர் தானும் சீட்டு கட்டியதுடன், தனக்குத் தெரிந்த சுமார் 250 பேரையும் இதில் இணைத்துள்ளார். இவர்கள் அனைவரும் சேர்ந்து சுமார் 27 லட்சம் ரூபாய் வரை பணம் கட்டியிருந்த நிலையில், கடந்த தீபாவளி பண்டிகையின் போது திடீரென அந்த தம்பதியினர் தலைமறைவாகினர். வாக்குறுதி அளித்தபடி நகை மற்றும் பரிசுப் பொருட்களை வழங்காமல் ஏமாற்றியதுடன், கட்டிய பணத்தையும் தராமல் தப்பிச் சென்றதால் பாதிக்கப்பட்டவர்கள் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

   

புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தினேஷ்குமார் மற்றும் புவனேஸ்வரி தம்பதியினர் தீபாவளி சீட்டு மட்டுமின்றி ஏலச்சீட்டும் நடத்தி, மொத்தம் 55 லட்சம் ரூபாய் வரை பொதுமக்களிடம் வசூலித்தது தெரியவந்தது. மேலும், தங்களுக்கு இருந்த பெரும் கடன் சுமையை அடைப்பதற்காகவே திட்டமிட்டு இந்த சீட்டுத் தொழிலைத் தொடங்கி, மக்களின் பணத்தை சுருட்டியது விசாரணையில் அம்பலமானது. கைதான தம்பதியினர் தாங்கள் வசூலித்த பணத்தைக் கொண்டு கடன்களை அடைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

   

தலைமறைவாக இருந்த தினேஷ்குமார் மற்றும் புவனேஸ்வரியை தேடி வந்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் மற்றும் பரிசுப் பொருட்கள் தருவதாகக் கூறி நடத்தப்படும் இது போன்ற சீட்டுத் திட்டங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் பணத்தைச் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.