உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், சினிமா படக்கதையை மிஞ்சும் வகையில் ஒரு வினோதமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கப்தங்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட பில்காவ் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண், கடந்த 2024 ஜூலை மாதம் தனது மகனுடன் மாயமானார். மனைவியைக் காணவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கணவர் சந்தீப் போலீசில் புகார் அளித்திருந்தார். இரண்டு ஆண்டுகளாக எந்தத் தடயமும் கிடைக்காமல் திணறி வந்த போலீசாருக்கு, பிரியங்காவின் மொபைல் எண்ணிற்கு வந்த ஒரு OTP (One Time Password) ஒட்டுமொத்த வழக்கையுமே திசைதிருப்பியது. அந்த எண்ணை வைத்துத் தேடியபோது, பிரியங்கா உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா, அயோத்தி சரயு நதியில் தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அப்போது அங்கிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த மங்களசந்திரா என்பவர் பிரியங்காவைக் காப்பாற்றியுள்ளார். பின்னர் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்ட பிரியங்கா, மங்களசந்திராவுடன் ராஜஸ்தானிற்குச் சென்று அங்கு அவருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக ‘கொலை’ செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட பெண், வேறொரு மாநிலத்தில் சௌகரியமாக வாழ்ந்து வந்த தகவல், அந்தப் பெண்ணின் கணவர் முதல் காவல்துறை வரை அனைவரையும் அதிரவைத்துள்ளது.
