தெலங்கானா மாநிலம் கல்வகுர்த்தி பகுதியில் மருமகனே தனது மாமியாரைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்லிகா (60) என்ற அந்தப் பெண்ணின் இரண்டாவது மகள், மதுப்பழக்கத்திற்கு அடிமையான தனது கணவர் நரசிம்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். குடிபோதையில் மனைவியைத் தாக்கி வந்த நரசிம்மா, தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மாமியாரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
சம்பவம் நடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி, மல்லிகாவின் மகள் மற்றும் குழந்தைகள் உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தனர். வீட்டில் மல்லிகா மட்டும் தனியாக இருப்பதை அறிந்த நரசிம்மா, அங்குச் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அவர், ஒரு கட்டத்தில் எல்லையை மீறி தனது மாமியாரைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரைத் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
திருமணம் முடிந்து வீடு திரும்பிய மல்லிகாவின் மகள், தனது தாய் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மல்லிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் நரசிம்மாவைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் தனது மாமியாரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடும்ப உறவுகளுக்குள்ளேயே நடந்த இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
