“மனிதநேயம் இன்னும் சாகல”… “ஸ்கூட்டர் சீட் மேல் ஒரு துண்டுச்சீட்டு.. வக்கீல் செய்த அந்த காரியம்”…. இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்….!

By Nanthini on மாசி 11, 2026

Spread the love

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் மனிதநேயத்துடன் வைக்கப்பட்ட ஒரு துண்டுச்சீட்டினால், ஸ்கூட்டருக்குள் மறைந்திருந்த பாம்பு பிடிபட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கணபதி என்பவர், வழக்கம் போல தனது ஸ்கூட்டரை நீதிமன்றக் கட்டிடத்தின் முன் நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றுள்ளார். அவர் இல்லாத நேரத்தில் அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஸ்கூட்டருக்குள் பாம்பு புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உரிமையாளர் வந்து வண்டியை எடுக்கும்போது அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்ற அக்கறையில், அந்த நபர் ஒரு துண்டுச்சீட்டில் “இந்த வண்டியின் உள்ளே பாம்பு உள்ளது” என்று எழுதி, அதன் மீது ஒரு சிறு கல்லையும் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் இதைக் கண்ட கணபதியின் ஜூனியர் வழக்கறிஞர் அவருக்குத் தகவல் தெரிவிக்க, பதறிப்போன கணபதி உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார்.

   

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஸ்கூட்டரை முழுமையாகச் சோதனையிட்டனர். முதலில் பாம்பு தென்படாத நிலையில், வண்டியின் பாகங்களைக் கழற்றிப் பார்த்தபோது இண்டிகேட்டர் பகுதிக்கு பின்னால் ஒரு சாரைப்பாம்பு மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாவகமாகப் பிடிபட்ட அந்தப் பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. ஒருவேளை அந்தத் துண்டுச்சீட்டு வைக்கப்படாமல் இருந்திருந்தால் ஓட்டுநருக்குப் பெரும் ஆபத்து நேர்ந்திருக்கக்கூடும்; அந்த மர்ம நபரின் சமயோசித புத்தியையும் மனிதநேயத்தையும் நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.