அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்திற்குப் பிறகு ஓபிஎஸ் அணியில் இருந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் வினுபாலன் தலைமையில் சுமார் 250 குடும்பத்தினர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று இரவு நேரில் சந்தித்து தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர். மாவட்ட வாரியாக ஓபிஎஸ் தரப்பு பலவீனம் அடைந்து வருவதை இச்சம்பவம் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 இஸ்லாமிய குடும்பத்தினரும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சிறுபான்மையினர் நலனில் அதிமுக என்றும் உறுதியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அடுத்தடுத்து மாற்று அணியிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் அதிமுகவில் இணைவது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
