அதிமுகவில் நிலவும் அதிகாரப் போட்டிகளுக்கு இடையே, சசிகலா தனது அரசியல் பலத்தை நிரூபிக்கப் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளதாக அவரது வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கு முதல்வர் பதவி வழங்கிய சசிகலாவிற்கே எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாகக் கருதும் அவர், ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகியோரையும் அந்த “துரோகப் பட்டியலில்” இணைத்துள்ளார். வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், அதில் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை சசிகலா வெளியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த புதிய அரசியல் நகர்வின் ஒரு பகுதியாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் முதல்கட்டப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிரூபிக்க அதிக தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள சசிகலா, தானும் ஒரு தொகுதியில் களமிறங்கத் தயாராகி வருகிறார். சசிகலாவின் இந்த வருகை அதிமுகவின் வாக்கு வங்கியைப் பிரிக்குமா அல்லது விஜய்யுடன் இணைந்து புதிய கூட்டணியாக உருவெடுக்குமா என்ற விவாதம் தற்போதே அரசியல் களத்தில் அனலைப் பறக்கவிட்டுள்ளது.
